க்ரைம்

கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேலாரணி ஊராட்சி அருகேயுள்ள தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக காளியப்பன் (55) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 1-ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.

தலைமை ஆசிரியரின் நடவடிக்கையை கண்டித்து போளூரில் இருந்து மேல் சோழங்குப்பம் செல்லும் சாலையில் பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் காளியப்பனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தார்.

SCROLL FOR NEXT