சென்னை: சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் புழல் சிறை உதவி ஜெயிலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பேரம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பப்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை ஆபாச வர்ணனையுடன் யூ-டியூபில் நேரலை செய்த புகாரில் ‘பப்ஜி’ மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
அவரது மனைவியான கிருத்திகா, கணவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது மதன் சிறையில் உள்ளார்.
பப்ஜி மதன் கைதானவுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த மதன் மனைவி கிருத்திகா, ‘‘கணவர் மீது எந்த தவறும் இல்லை. அவர் குற்றமற்றவர் என நிரூபிப்போம். அவர் நிச்சயம் சிறையில் இருந்து வெளியே வருவார்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிறைத் துறை அதிகாரி ஒருவரிடம், கிருத்திகா பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில் பேசும் கிருத்திகா, ‘‘ரூ.3 லட்சம் தருகிறேன். அது பெரிய தொகையாக இருப்பதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. நான் பணத்தை தயார் செய்து விட்டு உங்களை அழைக்கிறேன்’’ என்று கூறுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் சிறைத் துறைஅதிகாரி, ‘‘ஓகே.. ஓகே. மதன் சொன்னாப்புல. அதுவரை பார்த்துக் கொள்ளலாம்’’ என்று பதில் அளிக்கிறார். தொடர்ந்து மதனுக்கு சிறையில் சட்டவிரோதமாக சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் முதல் கட்டமாக சிறை அதிகாரி ஜி-பே மூலம் ரூ.25 ஆயிரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, லஞ்சம்பெற்றுக் கொண்டு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த தமிழக சிறைத் துறை டிஜிபி சுனில் குமார் உத்தரவிட்டார். அதன்படி, இந்த விவகாரத்தில் சிக்கியது புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த லஞ்ச விவகாரத்தை வெளிவராமல் தடுப்பதாகக் கூறி பெண் ஒருவர் உதவி ஜெயிலர் செல்வத்திடம் பேரம் பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. அந்த பெண் யார் என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.