சென்னை: துரைப்பாக்கம் திமுக கிளைச் செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளாரான ராதாகிருஷ்ணனை சமயபுரம் காவல்துறையினர் அதிரடியாக மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் பகுதி திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்தவர் செல்வம். இவர் பிப்.1-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் சென்னையில் இருந்து காரில் தப்பிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து எல்லை பகுதிகளில் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,சந்தேகிக்கும் வகையில் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சென்னையில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரான சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 42) என்பதும் தெரியவந்தது.
உடனடியாக ராதாகிருஷ்ணனையும், காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த தனசீலன் (வயது 41) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் சமயபுரம் காவல்துறையினர் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.