க்ரைம்

முகக்கவசம் அணியவில்லை என கூறி கரோனா தடுப்பு அதிகாரிகள் போல் நடித்து மாநில தேர்தல் ஆணைய பெண் அதிகாரியிடம் 10 பவுன் பறிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முகக்கவசம் அணியவில்லை என கூறி மாநில தேர்தல் ஆணைய பெண் அதிகாரியை தடுத்து நிறுத்தி அவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் குறள்செல்வி. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி, பணிக்கு சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சாலையோரமாக இருந்த இளைஞர்கள் இவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் என பேசியபடி, முகக்கவசம் ஏன் அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, இளைஞர்களில் ஒருவர் திடீரென குறள்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.

இதை சற்றும் எதிர்பாராத குறள்செல்வி, திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரள்வதற்குள் மற்றொரு இளைஞரும் அங்கிருந்து தப்பினார்.

அதிர்ச்சி அடைந்த குறள் செல்வி இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தினருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT