சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது திமுக வட்டச் செயலாளர் செல்வம் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதும் நேற்று கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. படம்: பு.க.பிரவீன் 
க்ரைம்

மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

செய்திப்பிரிவு

ஆலந்தூர்: சென்னை, மடிப்பாக்கத்தில் திமுகபிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்துத் தேடி வருகின்றனர்.

மடிப்பாக்கம், பெரியார் நகர்6-வது தெருவைச் சேர்ந்த செல்வம்(35), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அதேபகுதியில் திமுக வட்ட செயலாளராகவும் இருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188-வது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட அவரது மனைவி சபீனாவுக்காக மனு செய்திருந்தார்.

இவரின் கட்சி அலுவலகம் அதேபகுதியான சதாசிவம் நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்துக்கு சால்வை அணிவிப்பது போல் பாவனை செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.

இதில் காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையைத் தடுக்கமுயன்ற தமிழரசன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. செல்வத்துக்கு மனைவி சபீனா, மகன், மகள் உள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலில் வார்டு கவுன்சிலர் ‘சீட்’ கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதம் காரணமா? என 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவத்தால் மடிப்பாக்கத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நேற்று அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கொலை வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யபோலீஸாருக்கு அறிவுறுத்த வேண்டும் எனச் செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT