க்ரைம்

கூடலூர்: பெண்ணின் புகைப்படத்தை ‘மார்ஃபிங்’ செய்து மிரட்டிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

கூடலூர்: விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (25). இவருக்கு, சமூக வலைதளம் மூலமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வசிக்கும் திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்குமாறு மனோகர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவருக்கு அறிவுரை கூறி விலகிச் சென்றார். ஆத்திரமடைந்த மனோகர், அந்த பெண்ணின் படத்தை மார்ஃபிங் செய்து அவருக்கு அனுப்பியதுடன், சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுசீலா தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மணம்பூண்டிக்கு தனிப்படை போலீஸார் சென்று மனோகரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கூடலூர் பெண் அளித்த புகாரின்பேரில் மனோகரை கைது செய்தோம். அப்போது அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தோம். அதில், இதுபோன்று பல பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது" என்றனர்.

SCROLL FOR NEXT