நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். திருவனந்தபுரம் வர்க்கலையில் உள்ள சுற்றுலா விடுதியில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விஜி(27). இவர்களுக்கு பிரியா(2) மற்றும் 6 மாத குழந்தை என, இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.
நேற்று மாலையில் ஜெபஷைனின் தாயார் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி ஒன்றில் இரு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்து கதறிய அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு விஜி தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடந்தார். தக்கலை டி.எஸ்.பி. கணேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இரு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு விஜி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
விஜியின் இந்த முடிவுக்கு குடும்ப பிரச்சினை காரணமா? பின்னணியில் வேறு ஏதும் சம்பவம் உள்ளதா? என மார்த்தாண்டம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.