போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்று ரூ.1.8 கோடி மோசடி செய்த திருப்பத்தூர் தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவல கத்தில் நேற்று வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் வியாபாரி செந்தில்குமார் (45). இவர், திருப்பத்தூர் எஸ்.பி., அலுவல கத்துக்கு நேற்று வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கள், அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
பிறகு, காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் செந்தில் குமார் கூறியதாவது, ‘‘ திருப்பத்தூரைச் சேர்ந்த நான் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் செல்போன் நிறுவனத்தின் முகவராக இருந்து வருகிறேன். இந்நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் தாமோதிரன் (49) என்பவர் எனக்கு தொழில் ரீதியாக அறிமுகமானார்.
இந்நிலையில், ஆதியூரில் உள்ள தாமோதிரனின் மனைவி மாலதி என்பவருக்கு சொந்தமான 50 சென்ட் காலி மனைகளை அவர் விற்பனை செய்ய உள்ளதாகவும், அதை நான் வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். எதிர்காலத்தில் அந்த நிலம் நல்ல விலை போகும் என்பதாலும், தாமோதிரனுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் நிலத்தை விற்பனை செய்ய முன்வந்ததாக கூறினார்.
இதையடுத்து, அந்த நிலத்தை நான் வாங்க சம்மதம் தெரிவித்தேன். அதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதியூரில் உள்ள காலி நிலத்தை அவர் என்னிடம் காட்டினார். அதற்கான பத்திரத்தின் நகல்களை என்னிடம் வழங்கினார். நான் அவர் மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அந்த நிலத்தை 1 கோடியே 8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்.
இதையடுத்து, அந்த நிலத்துக்கான பட்டா கேட்டு நான் வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பித்தபோது, அந்த நிலம் தாமோதிரன் மனைவி மாலதிக்கு சொந்தமானது இல்லை என்பதும், அவர் போலி பத்திரம் தயாரித்து என்னிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் சென்று கேட்டபோது எனது பணத்தை சிறிது காலம் கழித்து கொடுப்பதாகவும், அந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தை எனக்கு தருவதாக வாக்குறுதியளித்தார்.
ஆனால், பல மாதங்களாகியும் அதற்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. சிறிது காலம் கழித்து அவர் என்னை மிரட்ட தொடங்கினார். இது தொடர்பாக திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தேன். ஆனால், எனது மனு மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக தாமோதிரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும். தாமோதிரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் செந்தில்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.