திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் திமுக வட்டச்செயலாளர் பொன்னுதாஸ் என்ற அபேமணி(38) கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டுவந்த வழக்கறிஞர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைசேர்ந்த பொன்னுதாஸ், 35-வது வட்ட திமுகசெயலாளராக இருந்தார். கடந்த 2 நாட்களுக்குமுன் இரவில் தனது வீட்டருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை காரில் வந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பியது.
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை உதவி ஆணையர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த ஈஸ்வரன், பேச்சிமுத்து, கருப்பையா, விக்னேஸ்வரன், அழகுராஜ், சிவகங்கையை சேர்ந்த ஆசைமுத்து, பாளையங்கோட்டையை சேர்ந்த தேவராஜன் ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அபே மணியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தனிப்படையினரால் தேடப்பட்டு வந்த பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்பிரவீன் (34) திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்றுசரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர்ஜெய்கணேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் அபேமணியின் உடலை அவரது உறவினர்கள் நேற்று பெற்றுக் கொண்டு, பாதுகாப்புடன் எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.