சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவு ஊழியர்களிடம் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சென்னைக்கு கார்கோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 25-ம் தேதி மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தனிப் படையினர் சென்னை பழைய விமானநிலைய வளாகத்தில் உள்ள சர்வதேச சரக்குப் பிரிவு அலுவலகத்துக்கு வந்து, கார்கோ விமானங்களில் கொண்டுவரப்பட்ட சரக்குகளை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துபாயிலிருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலில் இருந்த செல்போன் எண்ணை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரியவந்தது. மேலும், அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த பார்சலைத் திறந்து பார்த்தனர். அதில், 12 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், இதுகுறித்து சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.