திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ்(52). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மகன் திருப்பதி(23). தனது இரு சக்கர வாகனத்தில் தாயார் சுமித்ரா(45), உறவினர் சரஸ்வதி மற்றும் சரஸ்வதியின் 8 நாளான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து ஜோலார் பேட்டை நோக்கி சென்றார்.
திருப்பத்தூர் அடுத்த கல்லறை மேடு அருகே சென்றபோது வாணி யம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து திருப்பதி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சுமித்ரா மீது அரசுப் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் அங்கு சென்று விபத்தில் உயிரிழந்த சுமித்ராவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் திருப்பதி மற்றும் சரஸ்வதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பிறந்து எட்டு நாளான பெண் குழந்தை லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசுப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.