க்ரைம்

திருச்செங்கோடு அருகே சோகம்: தறிப்பட்டறை உரிமையாளர், மனைவி, மகளுடன் தற்கொலை

செய்திப்பிரிவு

தறிப்பட்டறை உரிமையாளர், அவரது மனைவி மற்றும் பிளஸ் 2 படிக்கும் அவரது 2-வது மகள் உள்ளிட்ட மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் பகுதியில் வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). தறிப் பட்டறை உரிமையாளர். இவரது மனைவி நீலாம்பாள் (50). இவர்களது மகள் பிரீத்தி. திருமணமானவர். 2-வது மகள் ஷாலினி. பிளஸ் 2 மாணவி.

பெரிய அளவில் தறிப்பட்டறை நடத்தி வந்த வெங்கடாசலம் 8 தறிகளை மட்டும் லீசுக்கு விட்டுவிட்டு, மற்ற தறிகளை விற்று பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்துள்ளார்.

நேற்று மாலை ராசிபுரத்தில் வசிக்கும் மூத்த மகள் பிரீத்தி, தந்தைக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் அவரது சித்தப்பா மகன் சரண் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சரண் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

ஜன்னல் வழியாக பார்த்தபோது நீலாம்பாள் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடாசலமும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மொட்டைமாடி அருகேயுள்ள குளியலறையில் ஷாலினி தூக்கில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான போலீஸார் மற்றும் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன், துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மூவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT