சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (எ) படப்பை குணா. ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உட்பட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்துகொண்டே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. குணா உள்ளிட்ட ரவுடிகளைப் பிடிக்க டிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே, குணாவின் மனைவி எல்லம்மாள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில், அவரை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. .
இந்நிலையில், தலைமறைவாக இருந்த குணா, சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.