திருமங்கலத்தில் ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை வழக்கில் கார் ஓட்டுநரைப் போலீஸார் கைது செய்து 63 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் கிறிஸ்டியன் காலனியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி துணைப் பொதுமேலாளர் திருமாவளவன், அரசுப் பள்ளி ஆசிரியை எபினேசர் பியூலா(58) ஆகியோர் டிச.24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றனர்.
மீண்டும் திரும்ப வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 65 பவுன் நகைகள், ஒன்றரை லட்சம் பணம் திருடு போயிருந்தது. இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸார் விசாரித்தனர்.
திருமங்கலம் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முத்துராஜ் என்ற சுஜித்(30) என்பவரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 63 பவுன் நகைகளை மீட்டனர். இவர் மீது திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.