விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள்குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடைபெறுகிறது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் பங்கேற்கிறார்கள். இக்கோயிலில் மாசி கொடை விழா விமரிசையாக நடைபெறும்.
இக்கோயிலில் உள்ள பெண்கள்கழிப்பறை மற்றும் குளியலறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த 3 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தனர். கேமராக்களில் எந்தவிதமான பதிவுகளும் இல்லை. மேலும் அந்த கேமராக்களில் வயர் இணைப்புகள் எதுவும் கொடுக்காமல் இருந்தது.
கோயில் பூசாரி முருகன் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கழிப்பறை மற்றும் குளியலறையில் சிசிடிவி கேமராக்களை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.