நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர், தனது மனைவி மயூரி (35) மற்றும் தனது குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து ஒசூர் நோக்கிச்சென்றார். நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் வழியாக சென்ற போது, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மயூரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
அப்போது, சுரேஷ் தனது மனைவியுடன் நிலை தடுமாறி குழந்தைகளுடன் கீழே விழுந்தார். அதே நேரத்தில் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே, சுரேஷ் மற்றும் அவரது மனைவி கூச்சலிட்டதும் அவ் வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்களை மடக்கினர். அதில் ஒருவர் மட்டுமே பிடிபட்டார், மற்றொருவர் வாகனத்துடன் தப்பியோடினார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு நாட்றாம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், அவரிடம் பெரிய வீச்சரிவாள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.