சங்கராபுரம் அருகே இரு பிரிவினரி டையே ஏற்பட்ட மோதலின் போது பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் கேன்களை ஏற்றுவதற்காக வாகனம் வந்துள்ளது. அப்போது வாகனம் வரும் வழியில் இளைஞர்கள் சிலர் நின்றிருந்ததால், அவர்களை சற்று தள்ளி நிற்குமாறு ரமேஷ் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த இளைஞர்கள், சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைக்கண்ட ரமேஷின் அண்ணன் மனைவி சூர்யா சம்பவ இடத்திற்கு சென்று மறித்தார். அப்போது, அவரையும் சரமாரியாக தாக்கி பாலியல் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் அவரது நிலை மோசமடைந்துள்ளது. இதை யடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையறிந்த கிராம மக்கள், ரமேஷ் மற்றும் சூர்யாவை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் இரவு சங்கராபுரம்-செல்லம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சங்கராபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து நேற்று சூர்யா மற்றும் ரமேஷை தாக்கியதாக செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, கண்ணன், அலெக்ஸ்பாண்டியன், புயலரசன் மற்றும் ராஜா ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். புயலரசன், அலெக்ஸ்பாண்டியன், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் செல்லம்பட்டு கிராமத்தில் போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.