புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் முகம் தெரியாத நபரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்த போது, ஆபாசமாக அந்த மாணவியின் உடலை காண்பிக்குமாறு கூறி, அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் அந்த ஆபாச வீடியோவை தனது நண்பருக்கு அனுப்பிய இளைஞர் அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு ஊட்டிக்கு வருமாறு அழைத் துள்ளார். இல்லையெனில் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே இது குறித்து மாணவியின் பெற்றோர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீஸார் போக்சோ பிரிவில் மாணவியை மிரட்டிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்தவர் நாகை மாவட்டம் பேரவான்சேரி கீழத்தெருவைச் சேர்ந்த விஜயராஜ் (25) என்பது தெரிய வந்தது. அவரைத் தேடி நாகை சென்ற புதுச்சேரி தனிப்படை போலீஸார் வீட்டில் பதுங்கியிருந்த விஜயராஜை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.