க்ரைம்

திருப்பத்தூர்: விவசாயி வீட்டில் திருடியவர் சிக்கினார்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் நாச்சார்குப்பம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஜலகண்டன் (52). இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு கண்விழித்தார். உடனே, எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்த மர்ம நபர் ஒருவர் அதிலிருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம், அங்கிருந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றது தெரியவந்தது.

ஜலகண்டனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் எழுந்து வந்து தப்பி யோட முயன்ற மர்ம நபரை பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அதேபகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பரந்தாமனை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT