சேலம்: சேலம் வழியாகச் சென்ற ரயிலில் கிடந்த 15 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் போலீஸார் சோதனை செய்தனர். இதில், மூன்று ரயில் பெட்டிகளின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 15 கிலோ கஞ்சா பண்டல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பண்டலை யார் எடுத்து வந்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.