ஜெயங்கொண்டம் அருகே சிறுமிகளை திருமணம் செய்த 2 இளைஞர்கள் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள தத்தனூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ராஜ்குமார்(23). இவர், 15 வயது சிறுமியை அண்மையில் திருமணம் செய்துள்ளார். தற்போது, சிறுமி கர்ப்பமாக உள்ள நிலையில், மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கார்த்திகேயன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், ராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல, அதே கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித்குமார்(24) 17 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்ததை அடுத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார், ரஞ்சித்குமார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரஞ்சித்குமாரை தேடிவருகின்றனர்.