பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய சரகம் திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் மகள் மகாலட்சுமி(10) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். மகாலட்சுமி, ஜன.6-ம் தேதி தனது பெரியப்பா முருகன் வீட்டிலிருந்து ரூ.70 பணத்தை எடுத்து, தின்பண்டங்கள் வாங்கி தின்று செலவழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் மணிமேகலை, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் உறவினரான போஜன் மனைவி மல்லிகாவுடன் சேர்ந்து அன்று இரவு சிறுமியை அடித்து உதைத்ததாகவும், காய்ந்த மிளகாயை எரித்து அந்த புகையை சிறுமியை சுவாசிக்கச் செய்து, உடலில் பல்வேறு இடங்களில் சூடுபோட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மறுநாள் (ஜன.7) சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உள்ளூரில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். எனினும், சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானது. இதையடுத்து நேற்று முன்தினம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அவரது தாய் அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்த மருத்துவர்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார், சிறுமியின் உயிரிழப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு அதனடிப்படையில் வழக்கில் மாற்றம் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.