வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.9.50 லட்சம் மோசடி செய்ததாக புரட்சி பாரதம் கட்சியின் புதுச்சேரி தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீது கம்மாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் அம்மாசி மகன் இளையராஜா (39). இவர், கடந்த 2019-ம் ஆண்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த காலிப் பணி யிடங்களுக்கு தனது பெயரிலும் மனைவி மேகலா பெயரிலும் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது அவரைத் தொடர்பு கொண்ட மும்முடிசோழகனைச் சேர்ந்த ரா.ராஜகீர்த்தி,வடலூரைச் சேர்ந்த சங்கரலிங்கம் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராததால், கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இளைய ராஜாவை, புதுச்சேரியைச் சேர்ந்தபுதுச்சேரி மாநில புரட்சி பாரதம்கட்சியின் தலைவர் ரவியிடம் ராஜகீர்த்தி அழைத்துச் சென்றுள் ளார்.
அப்போது ரவி, தனக்கு தமிழக அரசில் அதிக செல்வாக்கு உள்ளதாகவும் மொத்தம் ரூ.8 லட்சம் தந்தால் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.இதை உண்மையென நம்பிய இளையராஜா, ரவியின் மகன் பிரசாந்த் கணக்கில் ரூ.8 லட்சம் செலுத்தியுள்ளார்.
இதன்பின்னரும் வேலை வாங்கித் தராததால் மீண்டும் ராஜகீர்த்தியிடம் இதுபற்றி இளை யராஜா கேட்டுள்ளார். அப் போது ராஜகீர்த்தி அவரது மனைவி மாலினி ஆகியோர் சேர்ந்து இளையராஜாவை மிரட்டியதாகக் கூறப் படுகிறது.
இதுகுறித்து இளையராஜா, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், இளையராஜா ஏமாற்றப்பட்டது உண்மை யென தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜகீர்த்தி, அவரது மனைவி மாலினி, சங்கரலிங்கம், ரவி அவரது மகன் பிரசாந்த் ஆகிய 5 பேர் மீது கம்மாபுரம் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.