ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்றது. சேலத்தில் ரயில்வே போலீஸார் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். ரயிலில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்து அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனையிட்டனர்.
பையில், 10 பண்டல்களில் 21 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (64), இருளப்பன் (64) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்து, வேறு ரயில் மூலம் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாண்டி, இருளப்பன் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.