சிறை மற்றும் அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் மற்றும் வேலூர் மாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அம் மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த தேவன் மகன் உதயகுமார் (27) என்பவர் சிறைத் துறையில் வேலை செய்வதாக எங்களிடம் அறிமுகமாகி சிறை மற்றும் அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.6 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி மூலம் கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் ரூ.2.83 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் வரை பணம் மோசடி செய்து, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருவதாகவும், அரசு வேலைக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, கொலை மிரட்டல் விடுப்பதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட உதயகுமாரை வேலூர் எழில் நகர் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர் மீது பாகாயம், வேலூர் வடக்கு, தெற்கு, காட்பாடி, விருதம்பட்டு மற்றும் சத்துவாச்சாரி ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும், அரசு வேலை வாங்கி தருவதாக குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே உதயகுமார் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த உதயகுமார் மீண்டும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.