க்ரைம்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை: கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்துவதாக கூறி, பெண்ணின் குடும்ப நண்பர்களான விமல்ராஜ் (32), கார்த்தி (27) ஆகியோர் அந்தபெண்ணை ஆட்டோவில் அழைத்துசென்றுள்ளனர். வடுகபாளையம் புத்துமாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, ஆட்கள் நடமாட்டம் குறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி கார்த்தியும், விமல்ராஜும் மது அருந்தியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் கைகளை பெல்ட்டால் கட்டிவிட்டு, அடித்து துன்புறுத்தி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிஆர்.நந்தினிதேவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத் துக்காக விமல்ராஜ், கார்த்திஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ.5,000 அபராதம்விதித்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகாத கார்த்திக்கு பிடிவாரண்ட்பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜரானார்.

SCROLL FOR NEXT