க்ரைம்

வேலூர்: முகத்தில் விபூதியை ஊதி நகைகள் திருட்டு

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் கொணவட்டம் பெரிய மசூதி, கரீம் சாயுபு தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா (29). இவர், தனது தாய் மற்றும் மகனுடன் நேற்று காலை வீட்டில் இருந்தபோது, குறி சொல்வது போல் வந்த ஒரு மர்ம நபர், ஆயிஷாவிடம் ‘உன்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தோஷம் கழிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

மகனின் உயிருக்கு ஆபத்து என்று கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஆயிஷாவிடம், தோஷம் கழிக்க உன் கையில் இருக்கும் நகைகளை கழற்றி கொடுக்குமாறு அவர்கூறியுள்ளார். இதையடுத்து ஆயிஷா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்துள் ளார்.

அந்த மர்ம நபர், ஒரு மண் சட்டியில் நகைகளை போட்டு மந்திரங்களை ஓதியதுடன் கையில் வைத்திருந்த விபூதியை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த ஆயிஷா, அவரது தாயார் மற்றும் நான்கு வயது சிறுவன் மீது ஊதியுள்ளார்.

இதில், மூவரும் மயங்கி விழுந்தனர். பின்னர், மயக்கம் தெளிந்ததும் எழுந்து பார்த்தபோது ஆயிஷா மற்றும் அவரது தாயார் அணிந்திருந்த நகைகள் 4.5 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT