திருச்சி: திருச்சி உறையூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகள் சினேகா(25). இவருக்கும் புள்ளம்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் 2021 ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின்னர், வரதட்சணை கேட்டு கணவர் விஜயகுமார், மாமனார் அறிவழகன், மாமியார் சகாயராணி ஆகியோர் சினேகாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சினேகா திருச்சியில் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் தன் கணவருடன் வசித்த வீட்டில் டிச.27 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினேகாவின் தந்தை காமராஜ் புகார் அளித்தார். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மணப்பெண் இறந்துள்ளதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சினேகாவின் கணவர் புள்ளம்பாடியைச் சேர்ந்த விஜயகுமார்(28), மாமனார் அறிவழகன்(57), மாமியார் சகாயராணி(51) ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.