டீக்கா ராம் மீனா. 
க்ரைம்

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய சம்பவம்: ஊழியரே ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்

செய்திப்பிரிவு

சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்து ரூ.1.32 லட்சம் பணத்தை ஊழியரே கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று காலை (திங்கள்கிழமை) பயணிகள் டிக்கெட் பெற நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த நிலையில், டிக்கெட் கவுன்ட்டர் திறக்கப்படாதது கண்டு சந்தேகத்தின்பேரில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, எழும்பூர் ரயில்வே போலீஸார் அங்கு வந்தபோது, டிக்கெட் கவுன்டரின் பின்பக்க கதவும் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இரவுப் பணியிலிருந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பயணச் சீட்டு விற்பனையாளர் டீக்கா ராம் மீனா அங்கிருந்த நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை மீட்ட போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி முதல் நேற்று காலை 7 மணி வரை டீக்கா ராம் மீனா பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை டிக்கெட் கவுன்டரின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் 3 பேர், அவரைத் தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டு, 4 நாள் டிக்கெட் வசூல் பணம் ரூ.1.32 லட்சத்தைக் கொள்ளையடித்தாக அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் டீக்காராமை உள்ளே வைத்து, வெளிப்புறமாக பூட்டிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மனைவியுடன் சேர்ந்து கொள்ளை: உண்மையை அறிய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தின் சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்தனர். அதில் கொள்ளையர்கள் வந்து சென்றதற்கான சுவடே இல்லாததை கண்டறிந்தனர். இதனை அடுத்து, போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. டீக்காராம் தானே கொள்ளையடித்து நாடகமாடியிருக்கலாம் என்ற கோணத்தில் நிலையத்தின் ஊழியர்களை விசாரித்தனர். இரவு பாதுகாப்புப் பணிக்கு வரவேண்டிய காவலரையும் இரவு வேண்டாம் என்று டீக்காராம் மீனா கூறியதாக கூறப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் டீக்காராமைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசியுள்ளார். அவரிடம் மிகத் தீவிரமாக விசாரணை செய்ததில், தானும் தன்னுடைய மனைவியும் இணைந்து நாடகத்தை அரங்கேற்றியதை டீக்காராம் ஒப்புக்கொண்டார். வடமாநிலத்தைச் சேர்ந்த டீக்காராம் மூன்று குழந்தைகளுடன் இந்த தம்பதியினர் ஊரப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனில் சிக்கித் தவித்த டீக்காராம், இந்தக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இரவு 2 மணிக்கு ஊரப்பாக்கத்திலிருந்து ஆட்டோவில் கிளம்பி வந்த டீக்காராமின் மனைவி, கொள்ளை நாடகத்தை அரங்கேற்றிவிட்டு பணத்துடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ரயில்வே போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT