குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியைப் பார்வையிட்ட தென்மண்டல ஐ.ஜி. அன்பு. 
க்ரைம்

முன்விரோதம்; திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை: நான்கு பேர் கைது 

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகை எடுப்பது தொடர்பாக இருந்துவந்த முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞரைக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ்குமார் (26). இவர், மேற்கு மரியநாதபுரத்தில் உள்ள செட்டிகுளக்கரையில் இரவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் ராகேஷ்குமாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். உடன் இருந்த நண்பர்கள் ராகேஷ்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே ராகேஷ்குமார் உயிரிழந்தார்.

தகவலறிந்த திண்டுக்கல் டி.ஐ.ஜி விஜயகுமாரி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். உடனடியாக ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடினர். இதில் செட்டிகுளத்தில் மீன் குத்தகை ஏலம் தொடர்பாக முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மீன் குத்தகை ஏலத்தில் போட்டியாகச் செயல்பட்ட மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மரிய ஆரோக்கியதாஸ் மகன் பிரகாஷ் (36), சந்தியாகு மகன் மரியபிரபு (37), பெருமாள் மகன் ஜான்சூர்யா (27), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (28) உள்ளிட்டோருக்குக் கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராகேஷ்குமார்

இதையடுத்து நால்வரையும் போலீஸார் கைது செய்து, கொலை செய்யப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இரண்டு அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

நாட்டுத்துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செட்டிகுளம் பகுதியில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நள்ளிரவில் ராகேஷ் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தொடர்புடைய நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். குற்றவாளிகளிடமிருந்து இரண்டு அரிவாள், நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகளில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று ஐ.ஜி. அன்பு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT