க்ரைம்

தஞ்சாவூர் காவல் சரகத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டில் 256 பேர் கைது: டிஐஜி பிரவேஷ்குமார் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் காவல் சரகத்தில் 2021-ம் ஆண்டில் 256 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் சரகத்துக்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 2021-ம் ஆண்டில் மட்டும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 366 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு, கொள்ளை குற்றங்கள் தொடர்பாக 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருட்டுப் போனவற்றில் 73 சதவீதப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

444 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 529 பேர் கைது செய்யப்பட்டு, 1,160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை தொடர்பாக 6,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிமாநில மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணல் திருட்டு தொடர்பாக 1,392 வழக்குகள் பதிவு செய்து 1,961 பேர் கைது செய்யப்பட்டு, 1,729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது 20,879 வழக்குகள் பதிவு செய்து, 21,240 பேர் கைது செய்யப்பட்டு, 976 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 156 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 43 பேர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 பேர் என தஞ்சாவூர் காவல் சரகத்தில் மொத்தம் 256 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT