க்ரைம்

கொடைக்கானல்: சிறுமி உயிரிழந்த மலைகிராம நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்

செய்திப்பிரிவு

சிறுமி மர்மமாக உயிரிழந்த கொடைக்கானல் மலைக் கிராம பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கொடைக்கானல் பாச்சலூர் மலை கிராம நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி பிரகதி. இவர் சில நாட்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளி அருகே தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் துப்பு கிடைக்காததால், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றப்பட்டது.

ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாச்சலூர் பள்ளியில் பணியில் இருந்த தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் ராஜதுரை, மணிவேல்ராஜ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் பாண்டித்துரை உத்தரவிட்டார்.

இவர்கள் கொடைக்கானல் மேல்மலைப் பகுதி கிராமமான தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கிளாவரை மற்றும் அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள பூண்டி, பழம்புத்தூர் மலைகிராமங்களுக்கு தனித்தனியே இடமாறுதல் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் சிறுமி மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையாக இந்த இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT