க்ரைம்

திருச்சி: மாமியாரை கொலை செய்து எரித்துவிட்டு காஸ் கசிவால் இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது

செய்திப்பிரிவு

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் 8-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆசிம்கான்(28). விருத்தாசலத்தில் நெல் அரைவை மில், மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேஷ்மா(27). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் வீட்டின் சமையலறையில் ஆசிம்கானின் தாயார் நவீன்(46) தீக்காயத்துடன் நேற்று முன்தினம் இறந்துகிடந்தார். இதுதொடர்பாக ஆசிம்கான் அளித்த புகாரின்பேரில், வீட்டில் சமையல் செய்தபோது காஸ் கசிவு ஏற்பட்டு ஆடையில் தீப்பிடித்ததால் நவீன் இறந்ததாக காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் உடற்கூறு ஆய்வில் நவீனின் தலையில் பல இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்ததால், சந்தேகத்தின்பேரில் மருமகள் ரேஷ்மாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு உருவான கர்ப்பத்தை கலைத்ததாலும், தன்னிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாலும் கோபத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கி, ஸ்குரு ட்ரைவரால் குத்தி கொலை செய்து உடலுக்கு தீ வைத்துவிட்டு, காஸ் கசிவு காரணமாக தீப்பிடித்து இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியதாக தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி ரேஷ்மாவை காந்தி மார்க்கெட் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT