மதுரை: நெல்லையில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு மகன், மகள்உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராமலெட்சுமி குழந்தைகளுடன் நெல்லையில் உள்ள பெற்றோர்வீட்டுக்குச் சென்று விட்டார். ஆவுடையப்பன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ராமலெட்சுமி மற்றும்குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி நெல்லைக்குவந்துள்ளார். ராமலெட்சுமியின் பெற்றோர் தங்கள் வீடு அருகிலேயே வீடு வாடகைக்கு பிடித்து அவர்களை தங்க வைத்தனர்.
இந்நிலையில் 5.8.2015-ல்கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராமலட்சுமி இரும்புக் கம்பியால்தாக்கி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆவுடையப்பனைநெல்லை டவுன் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து, ஆவுடையப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்தும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆவுடையப்பன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆவுடையப்பனின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கியது.இந்நிலையில் ஆவுடையப்பனின் மேல்முறையீடு மனு மீது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு: ஆவுடையப்பன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. மனுதாரரை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.