வேலூர் நகைக்கடை திருட்டில் கைதான டீக்காராமனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார். படம்: வி.எம்.மணிநாதன் 
க்ரைம்

வேலூர் நகைக்கடை திருட்டு சம்பவம்; சத்தமில்லாமல் சுவரில் துளையிடுவது எப்படி? - யூடியூப் வீடியோக்களை பார்த்து சதித்திட்டம்: தினசரி ஒவ்வொரு செங்கற்களாக உடைத்து துளையிட்ட திருடன்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 14-ம் தேதி சுவரை துளையிட்டு 16 கிலோ நகைகள் திருடப்பட்டன. இவ்வழக்கில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்காராமன் (27) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கத்தூர் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியது: கட்டிட தொழிலாளியான டீக்காராமன் திருட்டில் ஈடுபடுவதற்காக 3 மாதங்களுக்கு முன்பு ‘சத்தமில்லாமல் சுவரில் துளையிடுவது எப்படி’ என்று யூடியூபில் பல வீடியோக்களை பார்த்துள்ளார்.

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடையில் திருட ஒரு மாதத்துக்கு முன்பு திட்டமிட்டு நோட்டமிட தொடங்கினார். திருட்டு சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு கடையின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தினசரி சென்று ஒவ்வொரு செங்கற்களாக சத்தமில்லாமல் உடைத்து அகற்றியுள்ளார். கடந்த 14-ம் தேதி இரவு சுவரில் போடப்பட்ட துளையின் வழியாக உள்ளே சென்றவர் தரைத்தளத்தின் ஃபால் சீலிங்கை உடைத்து கடையினுள் நுழைந்தார்.

விலை உயர்ந்த நகைகளை ஒரு பையில் போட்டு வந்த வழியாகவே வெளியேறினார். கடந்த 15-ம் தேதி அதிகாலை 3.48 மணியளவில் நகைக்கடைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியின் சிறிய பாதை வழியாக முதுகில் பையுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சாலையின் இரண்டு பக்கமும் சுற்றும் முற்றும் பார்த்தபடி வெளியேறினார். சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு நடந்தே சென்றவர் அங்கிருந்து பேருந்து மூலம் ஒடுக்கத்தூர் சென்றுள்ளார்.

காட்டிக்கொடுத்த பூனை நடை

திருட்டு சம்பவத்துக்குப் பிறகு நகரில் உள்ள 200 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான ஒரு வார காட்சிகளையும், செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தோம். திருட்டில் ஈடுபட்ட பூனை நடைகொண்ட சந்தேக நபர் அடிக்கடி சுற்றி வருவதை 2 நாளில் அடையாளம் கண்டோம். அவரது படத்தை காவல் நிலையங்களுக்கு பகிர்ந்தோம்.

பள்ளிகொண்டா போலீஸ் உதவி ஆய்வாளர் கார்த்திக், ‘தங்களது காவல் எல்லையில் தனியார் பள்ளியில் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட நபர்தான் அவர் என்றும் அந்த திருட்டு சம்பவத்திலும் தனது அடையாளம் தெரியாமல் இருக்க பி.பி.இ கிட் அணிந்தபடி ஈடுபட்டுள்ளார்’ என்றார். ஆனால், அந்த திருட்டில் தான் ஈடுபடவில்லை என்றும் போலீஸார் தன்னை துன்புறுத்துவதாக எஸ்பி அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்துள்ள விவரத்தையும் தெரிவித்தார்.

போலீஸாரின் இன்பார்மர்கள் உதவியுடன் ஒடுக்கத்தூரில் அவரை சுற்றிவளைத்தோம். ஆனால், திருடிய நகைகள் எங்கிருக்கிறது என்ற விவரத்தை தெரிவிக்காமல் போக்குக் காட்டினார். ஆனால் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தபோது, தான் ஒரு சிவ பக்தர் என்பதால் மயானம் எங்கிருக்கிறது என்றும், அங்கிருந்து மண்டை ஓடு ஒன்று வேண்டும் என பெண் ஒருவரிடம் விசாரித்துள்ளார். இந்த தகவல் தனிப்படை போலீஸாருக்கு தெரியவரவே மயானத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் டீக்காராமன் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டன.

யாரையும் கூட்டணி சேர்க்காமல் தனி ஆளாகவே இந்த திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT