க்ரைம்

சென்னை - ரூ.13.35 லட்சம் மோசடி: 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கணவன் - மனைவி கைது

செய்திப்பிரிவு

சென்னை: வீடுகளை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (62). இவரது மனைவி லதா மணி (58). இவர்கள் சென்னை, கொளத்தூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள பிளாட்டுகளை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, 2009-ல் ரூ.13.35 லட்சம் பெற்று, மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக, காவல் ஆணையர் உத்தரவுபடி, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கணவன், மனைவி இருவரும் பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மணி மற்றும் அவரது மனைவி லதா மணி ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, காவல் உதவி ஆணையர் ஜான்விக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருந்த மணி, லதா மணி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT