க்ரைம்

சென்னை - வேலை வாங்கித் தருவதாக ரூ.30 கோடி மோசடி: ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்ததாக ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் கவுரி சங்கரா(40). இவர், வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நிறுவனம், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

அதில், வேலை வாங்கித் தருவதாகவும், தொழில் வாய்ப்பு உருவாக்கித் தருவதாகவும் கூறி, ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல, 150 பேரிடம் ரூ.30 கோடி வரை ஏமாற்றியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், கவுரி சங்கராவைக் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுரேந்தர், லட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கவுரி சங்கராவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், தைரியமாக புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT