க்ரைம்

வேலூர் பிரபல நகைக்கடை திருட்டு வழக்கில் இளைஞர் சிக்கினார்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் இளைஞரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15-ம் தேதி பின்பக்க சுவரில் துளையிட்டு 16 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் திருடுபோனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நகைக்கடை திருட்டு சம்பவத்தில் நகைக்கடைக்குள் நுழையும் மர்ம நபர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மெலிந்த தேகத்துடன் இருப்பதும் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வயதுடைய நபர்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை கொண்டு தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், நகைக்கடையில் திருட்டு சம்பவம் நடந்த நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதைக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியபோது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது, ‘‘வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன் (22) என்பவரை பிடித்துள்ளோம். நகைக்கடையில் திருடுப்போன நகைகள் அவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை கைப்பற்றி மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நகைகளை அவர் விற்க முயன்றபோது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். 16 கிலோ நகைகளை அவர் ஒருவர் மட்டுமே கடையில் இருந்து வெளியே எடுத்து வந்து தப்பித்திருக்க முடியாது என்பதால், இந்த சம்பவத்திலும் அவருடன் சேர்த்து மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

அதன் அடிப்படையில் அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நகை திருட்டு வழக்கில் சிக்கிய ராமன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT