க்ரைம்

கேரள மந்திரவாதியிடம் குறி கேட்டு 6 மாத பேத்தியைக் கொன்றதாக பாட்டி உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தனது கணவர் உடல் நலம் பெறுவதற்காக மந்திரவாதியிடம் குறி கேட்டு, 6 மாத பேத்தியை கொலை செய்த பாட்டி உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன்(32). இவரது மனைவி ஷாலிஹா(24). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். 6 மாத பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், 6 மாத பெண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த பிளாஸ்டிக் தொட்டியில் நேற்றுமுன்தினம் இறந்து கிடந்துள்ளார். பின்னர், இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தையின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நசுருதீனின் சித்தி ஷர்மிளாபேகம்(48). இவரது கணவர் அஸாருதீன்(50). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அஸாருதீனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கேரள மந்திரவாதி முகமது சலீம்(48) என்பவரிடம் ஷர்மிளாபேகம் குறி கேட்டுஉள்ளார். அவர் உயிர் பலி தரவேண்டும் என கூறியதால் 6 மாத பெண் குழந்தையை கடந்த 15-ம் தேதி தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT