சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் 1-வது தெருவில் வசிப்பவர் விஜயலட்சுமி(54). இவர், கடந்த மாதம் 25ம் தேதி ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், விஜயலட்சுமி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீஸார் விசாரணை நடத்தி, கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குநர்கள் காலனியைச் சேர்ந்த விஜய்பாபுவை(35) கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ``கைது செய்யப்பட்ட விஜய்பாபு, திரைப்படத் துறை உதவி இயக்குநர். பட வாய்ப்புகள் இல்லாததால், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.