தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளி யூர் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 26.11.2021 அன்று ரூ.1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக் கொண்டு, சரக்கு பெட்டக லாரி ஒன்று, தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது. தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி விலக்கு பகுதியில் வந்தபோது காரில் வந்த 7 பேர், லாரியை வழிமறித்தனர்.
லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவரை தாக்கி லாரியை அவர்கள் கடத்திச் சென்றனர். தனிப்படை போலீஸார் விரட்டிச் சென்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் காக்கநேரி என்ற இடத்தில் லாரி மற்றும் காரை மடக்கிப் பிடித்தனர்.
இதுதொடர்பாக, தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்(39), பிரையன்ட் நகரைச் சேர்ந்த ச.விஷ்ணுபெருமாள் (26), எம்ஜிஆர் நகரைசேர்ந்த க.மாரிமுத்து (30), மட்டக்கடையைச் சேர்ந்த சே.மனோகரன் (36), முள்ளக்காடைச் சேர்ந்தபாண்டி (21), முறப்பநாடைச் சேர்ந்த வே.செந்தில்முருகன் (35), பாளையங்கோட்டையைச் சேர்ந்த து.ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரை கைது செய்தனர். ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரி பருப்பு மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான லாரியை போலீஸார் மீட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின்படி, குண்டர் தடுப்புசட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞானராஜ் ஜெபசிங் அடைக்கப்பட்டார்.