பாச்சலூர் சிறுமி கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள், பேச்சு வார்த்தைக்குப் பின்பு சிறுமியின் உடலை வாங்கிச் சென்றனர். 
க்ரைம்

திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற சிறுமி மர்ம மரணம்: சிறுமி உடலை வாங்க மறுத்து மறியல்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே பள்ளிகுச் சென்ற சிறுமியைகொன்ற கொலையாளியை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடி அருகேயுள்ள பாச்சலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 9 வயது மகள் அங்குள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளி இடைவேளையின்போது இவரை திடீரென காணவில்லை. நீண்ட நேர தேடுதலுக்குப் பின்பு பள்ளிக்கு அருகே உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், பழநி எம்எல்ஏ இ.பெ.செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியபோது மறியலில் ஈடுபட்டோர் வாக்குவாதம் செய்தனர். இரவுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என போலீஸார் உறுதி அளித்ததையடுத்து உடலை வாங்கிச்சென்று திண்டுக்கல் மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

சிறுமியின் இறப்புக் குறித்து ஏடிஎஸ்பிகள் லாவண்யா, சந்திரன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருகிய நிலையில் சிறுமி கிடந்த இடத்தை திண்டுக்கல் டிஐஜி, விஜயகுமாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோப்ப நாய் வரவழைத்து, தடயங்களைச் சேகரித்தனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பாச்சலூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாச்சலூர் பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். காலை 11.30 மணி வரை சிறுமி வகுப்பறையில் இருந்துள்ளார்.

பள்ளி இடைவேளையின்போது வெளியே சென்றவர் திரும்பவில்லை. அதே பள்ளியில் படிக்கும் இறந்த சிறுமியின் சகோதரி தேடிய பின்புதான் அந்த சிறுமியின் நிலை தெரியவந்தது. 11.30 மணி முதல் 12.45 மணிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணைக்காக நேற்று பள்ளி மூடப்பட்டது. பள்ளியைப் பூட்டி போலீஸார் சாவியை எடுத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT