கொல்லப்பட்ட சாமிநாதன் 
க்ரைம்

ரூ.1 கோடி கேட்டு மிரட்டி கல்குவாரி அதிபர் கடத்திக் கொலை: குவாரி ஊழியர் உள்ளிட்ட 2 பேரிடம் போலீஸார் விசாரணை

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே ரூ.1 கோடி கேட்டு மிரட்டி கல்குவாரி அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கல்குவாரி ஊழியர் உள்ளிட்ட 2 பேரிடம் தென்னிலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகேயுள்ள மங்களப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவருக்க சொந்தமான கல்குவாரி (கிரஷர்) கரூர் மாவட்டம் தென்னிலை அருகேயுள்ள கூனம்பட்டியில் உள்ளது. சாமிநாதன் நேற்று முன்தினம் இரவு குவாரியில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த அறையின் வெளியே தாழ்ப்போடப்பட்டிருந்த நிலையில் சாமிநாதனை நேற்று காலை காணவில்லை.

ஊழியர்கள் தேடிபார்த்தப்போது சாமிநாதன் மற்றும் அங்கிருந்த டிப்பர் லாரியை காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். சாமிநாதனை அவரது டிப்பர் லாரியிலேயே கடத்தி சென்ற சிலர் அவரை விடுவிக்க அவரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்னர்.

இதையடுத்து சாமிநாதன் அவரது மச்சினன் செல்லமுத்துவுக்கு போன் செய்த தன்னை சிலர் கடத்தியுள்ளதாகவும் ரூ.1 கோடி கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சாமிநாதன் தரப்பில் ரூ.20 லட்சம் வரை பணம் திரட்டிய நிலையில் தென்னிலை போலீஸில் சாமிநாதனை காணவில்லை என நேற்று மதியம் புகார் அளித்துள்ளனர். மேலும் சிலர் அவரை கடத்தி வைத்துக்கொண்டு ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்னர்.

இதையடுத்து போலீஸார் சாமிநாதன் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில் சேலம் மாவட் டம் தலைவாசல் அருகே காட்டியுள்ளது. சேலம் சென்னை புறவழிச்சாலையில் தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே போலீஸார் நேற்று ரோந்து சென்றப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற டிப்பர் லாரியை நெருங்கியப்போது அங்கு நின்ற இருவர் தப்பியோடியுள்ளனர்.

போலீஸார் அவர்களை விரட்டி சென்றப்போது ஒருவர் தப்பியோடிவிட மற்றவரை பிடித்து விசாரத்திப்போது திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் முத்தூரை சேர்ந்த கோபால் மகன் நவீன் (21) என தெரியவந்தது. அதன்பின் லாரியை சோதனை¬யிட்டப்போது ஓட்டுநர் இருக்கையில் கீழ் தலையில் வெட்டுகாயத்துடன் முதியவர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தென்னிலை போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில் போலீஸார் சாமிநாதன் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சாமிநாதன் கல்குவாரியில் கடந்த பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த விஜய் (25) மற்றும் தேவியாபட்டினத்தில் பிடிப்பட்ட அவரது நண்பரான நவீன் ஆகிய இருவரிடமும் பணத்திற்கு சாமிநாதன் கடத்தி கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக கல்குவாரி அதிபர் கடத்தில் கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT