புதுச்சேரியில் பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 3 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிளமென்ட் (48). பால் வியாபாரி. உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு வழியனுப்புவதற்காக நேற்று இரவு சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இன்று (நவ. 24) வீட்டுக்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேச் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த கிளமென்ட் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸார், விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.