ராஜேந்திர பாலாஜி | கோப்புப் படம். 
க்ரைம்

வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர், உதவியாளர் மீது ஐஜியிடம் புகார்

என். சன்னாசி

ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் உதவியாளர் மீது ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் புறவழிச்சாலையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் என்பவர் தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

"நான் சாத்தூரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறேன். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரின் தம்பியும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளருமான விஜய நல்லதம்பி என்பவர், எனது அக்கா மகனுக்கு விருதுநகரிலுள்ள ஆவின் துறையில் மேலாளர் வேலையை அமைச்சர் மூலம் வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் கடந்த ஆண்டு நவம்பரில் வாங்கினார்.

இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். மேற்படி நபர்கள் மீது ஆகஸ்ட் 28-ல் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தேன். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் எங்களிடம் விசாரித்தனர். அக்டோபர் 1-ம் தேதி பணத்தைத் திருப்பித் தருவதாகக் காவல் நிலையத்தில் விஜய் நல்லதம்பி ஒப்புக்கொண்டார்.

அக்டோபர் 1-ம் தேதி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸிடம் கேட்டபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விஜய் நல்லதம்பி புகார் அளித்து இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கித் தருவதாகத் தன்னிடமே ரூ.3 கோடி வரை வாங்கி முன்னாள் அமைச்சர் ஏமாற்றிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இதில் நம்பிக்கை இல்லை.

வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீதும், அவரது உதவியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT