ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலியாக ரூ.23.51 கோடி அளவுக்கு தங்க நகைக் கடன் வழங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டு புகாரைத் தொடர்ந்து வங்கியின் தலைவரை 6 மாத காலத்துக்குத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் குறித்த விவரங்களை வேலூர் சார் பதிவாளர் ஜெயபிரகாஷ், நகை மதிப்பீட்டாளர் பழனி ஆகியோர் கடந்த 21ஆம் தேதி 100% ஆய்வு மேற்கொண்டனர்.
வங்கியில் 4,537 பொது நகைக் கடன்களுக்கு ரூ.29.12 கோடி வழங்கப்பட்டிருந்தது. இதில், தங்க நகைகள் மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததில் வங்கியின் மூலம் 77 பேருக்கு ரூ.2.39 கோடிக்குப் போலியாக நகைக் கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. எடை குறைந்த நகைகள் சீலிடப்பட்டுத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் தகுதியை விடக் கூடுதல் தொகையை 5 பேருக்கு ரூ.12 லட்சம் அளவுக்கு கடன் வழங்கியுள்ளனர். இதில், கவிதா என்பவரின் பெயரில் 78 கிராம் எடையுள்ள நகைகளை 165 கிராம் எனக் குறிப்பிட்டு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளனர். ராகவேந்திரன் என்பவரின் பெயரில் 317 கிராம் தங்க நகைகளை 448 கிராம் எனக் குறிப்பிட்டு ரூ.12 லட்சத்துக்குக் கடன் வழங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் கல்யாணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வங்கி மேலாளர் லிங்கப்பா, ஊழியர்கள் சரவணன், ஜெகதீஸ் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி நிதி கையாடல் தொடர்புடைய பணியாளர்கள், வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், நிதி கையாடல் தொடர்புடைய பணியாளர்கள் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் கடன்தாரர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார் நேற்று (அக்.26) உத்தரவிட்டார்.
மேலும், வங்கிக்கு அதிக நிதியிழப்பு ஏற்படக் காரணமான குற்றச்சாட்டின் அடிப்படையில் கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமாரை 6 மாதத்துக்குத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து இணைப் பதிவாளர் ராஜ்குமார் இன்று (அக்.27) உத்தரவிட்டுள்ளார்.