போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவர் கையில் மாவுகட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சி. 
க்ரைம்

போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவர் கைது: மாவுகட்டுடன் மன்னிப்பு கேட்கும் விடியோ வெளியானது

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் போக்குவரத்து போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவரை போலீஸார் கைது செய்து, அவர் கையில் மாவு கட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி மங்களம் பகுதியை சேர்ந்தவர் வினாயகம் (33) இவர் வில்லியனூர் மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார், இவர் கடந்த 12 ம் இரவு புதுச்சேரி - விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான மதகடிப்பட்டில் பணியில் இருந்த போது அங்கு ஒரு டாடா ஏஸ்ஸும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, விபத்து குறித்து விசாரணையை போலீஸ்காரர் விநாயகம் செய்தார்.

அப்போது விபத்துக்கு உள்ளான இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது, மேலும் அங்கு விபத்துக்குள்ளான வாகனத்தை காவலர் விநாயகம் புகைப்படம் எடுக்க முயன்றபோது போக்குவரத்து போலீஸ்காரரை மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி அவரது செல்போனை பறிக்க முயன்று பின்னர் அதிலிருந்த ஒருவரால் தாக்கப்பட்டார். போலீஸார் தாக்கப்படுவதை அப்பகுதியில் இருந்தோர் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் விநாயகம் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விபத்துகுள்ளான இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் தன்ராஜ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இருவரும் விழுப்புரம் மாவட்டம் எல்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இதில் தன்ராஜ் உடன் வந்த வினோத் என்பவர் தான் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கினார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருபுவனை போலீஸார் தலைமறைவான வினோத் மற்றும் மகாலிங்கத்தை தீவிரமாக தேடி கைது செய்தனர். அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. கை முறிவு ஏற்பட்ட வினோத் மாவு கட்டுடன் மன்னிப்பு கேட்கும் விடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதுபற்றி போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி எல்லைப்பகுதியில் இருந்த வினோத், மகாலிங்கத்தை போலீஸார் கைது செய்ய சென்றனர். அப்போது போலீஸாரை கண்டு தப்பி ஓட முயன்றபோது வினோத்துக்கு கையில் எலும்பு முறிவும், மகாலிங்கத்துக்கு தலையில் அடிப்பட்டது. போலீஸ்காரரை தாக்கிய வினோத் மன்னிப்பு கோரும் விடியோ எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT