க்ரைம்

புதுச்சேரியில் சட்டவிரோதமாகத் தங்கி கஞ்சா விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கைது

அ.முன்னடியான்

புதுச்சேரியில் சட்டவிரோதமாகத் தங்கி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2.600 கிலோ கஞ்சா, பேக்கிங் மெஷின், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா கும்பல் இச்செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கஞ்சா விற்பவர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். முதல்வர் ரங்கசாமியும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் அவ்வப்போது பல இடங்களில் சோதனை நடத்தி கஞ்சா கும்பலைக் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனை குறையவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டவிரோதமாகத் தங்கி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி குருசுக்குப்பம் சின்னத்தம்பி வீதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீஸார் நேற்று இரவு அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 3 பெண்களும், 3 ஆண்களும் இருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஆப்பிரிக்கா நாட்டின் ருவாண்டாவைச் சேர்ந்த வவா உக்விஷாகா (32), முகேயோ ஆலிவர் (30), உமுருண்டியைச் சேர்ந்த ஆக்சல் (25), உகாண்டாவைச் சேர்ந்த நபுரீர ஹெலன் (25), ஆப்பிரிக்காவின் ஜூம்பாவைச் சேர்ந்த நன்டன்கோ மேரி (27), புரூணை நாட்டைச் சேர்ந்த இனிமகஸ்வி மொரிட்டி (25) ஆகியோர் என்பதும், கடந்த 2019-ம் ஆண்டு மாணவர்கள் விசாவில் இந்தியா வந்த இவர்கள் சட்டவிரோதமாக விசா இன்றி புதுச்சேரியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இவர்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த டிஜே நடன நிகழ்ச்சி நடத்தி வரும் விவேக் (30) என்பவர் துணையாக இருந்து உதவி செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.600 கிலோ கஞ்சா, பேக்கிங் மெஷின், 6 செல்போன், ஒரு டேப் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேரையும் அதிரடிப்படை போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் 7 பேரையும் இன்று (செப். 15) புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT