க்ரைம்

வரதட்சணை கொடுமை: எஸ்.பி அலுவலகத்துக்கு விஷம் குடித்து மனு கொடுக்க வந்த பெண்ணால் பரப்பரப்பு

இ.மணிகண்டன்

விஷம் குடித்துவிட்டு மனு கொடுப்பதற்காக எஸ்.பி அலுவலகத்திற்கு பெண் ஒருவர் வந்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரோஸ் காலனியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (38). இவரது மகள் ரேஷ்மா. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆனால் பேசியபடி வரதட்சணை நகை கொடுக்காததால் ரேஷ்மாவிடம் கணவர் வீட்டார் பிரச்சனை செய்துள்ளனர். இதனால், ரூ.14 லட்சம் மதிப்பிலான தனது வீட்டை சண்முகப்பிரியா மாப்பிள்ளை வீட்டாருக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நகைக்கான தொகை போக மீதியை திருப்பிக் கொடுக்காமல் மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் சண்முகப்பிரியா புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் விஷம் குடித்த நிலையில் விருதுநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு சண்முகப்பிரியா இன்று மாலை மனு கொடுக்க வந்தார்.

அப்போது மயக்கமான சண்முகப்பிரியாவை போலீசார் விசாரித்த போது விஷம் குடித்து வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT