சேலத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு வந்த மகனுக்குத் துணையாக வந்த தந்தையின் மீது, பேருந்தில் இருந்து கழன்று வந்த டயர் மோதியதில், அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மகன் கணேஷ் (17). பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் கணேஷ், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், சேலம் உடையாப்பட்டி அருகே தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதப்போகும் மகன் கணேசனை அழைத்துக்கொண்டு காசி விஸ்வநாதன் இன்று சேலம் வந்தார். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளி வளாகம் அருகே மகனும் தந்தையும் வந்தனர். அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பேருந்தின் பின் சக்கரங்களில் ஒன்று, திடீரெனக் கழன்று ஓடி, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த காசி விஸ்வநாதன், அவரது மகன் கணேஷ் ஆகியோர் மீது மோதியது. வேகமாக ஓடிவந்து சக்கரம் மோதியதில் காசி விஸ்வநாதன் கால்களில் முறிவு ஏற்பட்டது. மாணவர் கணேஷுக்குக் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது.
நடக்க முடியாத நிலை ஏற்பட்ட காசி விஸ்வநாதன், அந்த நிலையிலும் மகனைத் தேர்வு எழுத அனுப்பி வைத்தார். காலில் பலத்த காயம் ஏற்பட்ட காசி விஸ்வநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு சக்கரம் கழன்று ஓடி பழுதடைந்த பேருந்து, மேற்கொண்டு நகராமல் அதே இடத்தில் நின்றுவிட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக சேலம் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.